மட்டக்களப்பில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகள்.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம் உட்பட்ட மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு இன்று (15.07.2025) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் மண்டபத்தில் பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். முன்னதாக செம்மணி உட்பட கடந்த காலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டு சபை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ந்து இதன்போது தலைமை உரையாற்றிய தவிசாளர் வினோராஜ், "தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட செம்மணி படுகொலைக்கு நீதியான விசாரணையை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதுபோல் வடகிழக்கு தாயத்தில் பல படுகொலைகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன.
ஒட்டுக் குழுக்கள்
குறிப்பாக 1987 ஆம் ஆண்டு காலத்திற்குப் பின்னர் அப்போதிருந்த அரசாங்கங்களுடன் இணைந்து சில ஒட்டுக் குழுக்கள் செயற்பட்டு வந்தன. அவ்வாறான ஒட்டுக் குழுக்களால் எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம் உட்பட்ட மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
அவற்றையும் இந்த அரசாங்கம் நீதியான விசாரணைகளை முன்னகர்த்தி குற்றவாளிகளைக் கண்டு பிடித்து அவர்களையும் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். அவ்வாறு ஒட்டுக் குழுக்களாக இயங்கியவர்கள் முன்னாள் அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். எனவே இவ்விடையத்திலும் தற்போதைய அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும்.
என அவர் தெரிவித்திருந்ததோடு, தான் பிரதேச சபை தவிசாளராக பொறுப்பேற்றத்திலிருந்து தற்போது வரையில் மேற்கொண்டுள்ள வேலைகள் தொடர்பிலும், அபிவித்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆலயங்கள், தனியார் கல்வி நிலையங்கள், போன்ற பொது அமைப்புக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இதன்போது விபரித்தார்.
இந்நிலையில் தவிசாளரினால் முன்வைக்கப்படும் கருத்துக்களை தாம் முற்று முழுதாக ஏற்க முடியாது எனவும் நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்பட்ட விடயங்களுக்கு அப்பால் சென்று கூட்டத்தை தொடர்வதாகவும், செம்மணிப் படுகொலை விடயத்தை ஒரு பிரேரணையாகக் கொண்டு வருமாறும், தமக்கு சபையில் கருத்துச் சொல்லும் உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்து சபையிலிருந்த எதிர் தரப்பு உறுப்பினர்கள் 9 பேர் சபையிலிருந்து வெளியேறினர்.
அதில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேரம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் அடங்கலாக தலா ஒவ்வொரு உறுப்பிர்கள் அடங்கலாக 3 பேரும் மொத்தம் 9 பேர் சபையிலிருந்து வெளியேற்றினர்.
வேலைத்திட்டங்கள்
தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 9 பேரும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் தலா ஒவ்வொருவர் அடங்கலாக இருவரும், மொத்தம் 11 பேருடன் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான வீடமைப்புக்குழு, சுற்றாடல்குழு, தொழில்நுட்பக்குழு, நிதிக்குழு, போன்றவற்றுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான மயானங்கள், மைதானங்களுக்கு மின் விளக்கு பொருத்துதல், வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவான குளாய்களை வீதிகளுக்கு பொருத்ததல், வெள்ள அனர்த்த காலத்தில் வீதியை வெட்டுவதற்குரிய இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தல், மக்கள் வேவைகளை டிஜிற்றல் மயப்படுத்தல், டிஜிட்டல் தொழில் நுட்பம் தொடர்பில் 5 உத்தியோகஸ்த்தர்களுக்கு பயிற்சியளித்தல், பொதுச் சந்தைகளை புனரமைத்தல், ஆங்கில மொழிமூலமான பாலர் பாடசாலைகளை ஆரம்பித்தல், வீதிகளைப் புனரமைத்தல், மின்விளக்குகளைப் பொருத்துதல், சட்டம் தொடர்பில் மக்களுக்கு விழ்ப்புணர்வூட்டுதல், போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்தல், பாடசாலை மாணவர்களுக்கு இலவச கல்விக் கருத்தருத்தரங்குகளை மேற்கொள்ளல் போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
இந்நிலையில், சபையிலிருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்களும், தவிசாளரும் ஊடகங்களுக்கு கருத்துத் தத்தமது அப்பிப்பிராயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










