செம்மணியில் என்னையும் புதைத்தார்கள்! மழலைக் குரலில் நீதி கேட்ட சிறுவன் - கலங்கிய பார்வையாளர்கள்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கில் அமைந்துள்ள சென். பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவில் இடம்பெற்ற வினோத உடை நிகழ்வு பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நடைபெற்ற குறித்த விளையாட்டு விழாவின் இறுதியில் வினோத உடை நிகழ்வு இடம்பெற்றது.
எமக்கான நீதி
இதில் சிறுவர்கள் புனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் தோன்றிய நிலையில், ஒரு சிறுவன் செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட குழந்தையின் வேடத்தில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தாயின் மார்பில் பால் அருந்திக்கொண்டிருந்த வயதிலேயே தன்னைப் புதைத்துவிட்டதாகவும், தனக்கும் தன்னைப் போன்றவர்களுக்கும் நீதி கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பும் வகையில் அந்தச் சிறுவன் தனது வேடத்தை அமைத்திருந்தார்.

நிகழ்வில் விருந்தினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிறுவன், செம்மணியில் தன்னைப் புதைத்ததாகவும், தன்னுடன் புதைக்கப்பட்ட நண்பர்கள் தமக்கான நீதியைக் கோருமாறு தன்னை அனுப்பியதாகவும் மழலைக் குரலில் கூறினார்.
மேலும், தன்னைப் போன்ற குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதனைப் பெற்றுத்தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் நடித்திருந்தார்.
குறிப்பாக, “எமக்கான நீதியை அநுர மாமாவிடம் வாங்கித் தாருங்கள்” என அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் உடையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் ஒட்டப்பட்டிருந்தன.
செம்மணி மனிதப் புதைகுழி
அவற்றில், விளையாட வேண்டிய வயதில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, தாயின் அரவணைப்பை இழந்த சிறுவர்களின் துயரம், செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகள் உள்ளிட்ட உணர்வுபூர்வமான கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
விளையாட்டுப் பொம்மைகளைக் கையில் ஏந்த வேண்டிய வயதில் குழந்தைகளின் எலும்புகள் மண்ணுக்குள் கிடப்பதாகவும், தமது உயிர்களை மீட்டுத் தர முடியாவிட்டாலும் நீதியையாவது வழங்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பும் வாசகங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

குறித்த நிகழ்வின்போது சிறுவன் வெளிப்படுத்திய கருத்துகள் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்பள்ளி விளையாட்டு விழாவில் இடம்பெற்ற இந்த வினோத உடை நிகழ்வு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான நீதி கோரிக்கையை மீண்டும் சமூக மட்டத்தில் பேசுபொருளாக்கியுள்ளது.
இதன் மூலம் குழந்தைகளுக்கான நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளும் கவனத்தைப் பெற்றுள்ளன.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri