செம்மணி மனிதப் புதைகுழி! அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள்..
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் ஒன்றுதிரண்டு மிக உணர்வெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம்(23) திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்றாவது நாள் போராட்டம்
இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு அணையா விளக்கு மூன்றாவது நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் போராட்டமாக நடைபெறுகிற இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.
இதன்போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று கோரிக்கை மனுவொன்றினையும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆணையாளர் நேரடியாக வருகிறாரா இல்லையா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
திருகோணமலையில் ஒளிச்சுடர் எழுச்சி போராட்டம்
இதேவேளை, செம்மணி போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையிலும் ஒளிச்சுடர் எழுச்சி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ரொஷான்

























