அமெரிக்காவின் முடிவால் செம்மணி அகழ்வில் பெரும் நெருக்கடி! திரிசங்கு நிலையில் ஐ.நா
செம்மணி மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் முறையான ஒரு ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
எனினும், ஐ.நாவிற்கு கிடைக்கப்பெறும் நிதியில் மிகப்பெரிய சரிவு தற்போது ஏற்பட்டுள்ளதால் ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்படலாம் என்று சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய மனித எச்சங்கள்
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செம்மணி போன்று அடையாளம் காணப்படும் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள், முறையான ஆய்வுக்குட்படுத்தி, தொடர்புடையவர்களிடம் கையளிக்கப்பட்டு மீண்டும் அது புதைக்கப்படுதல் என்பதுதான் சரியான நடைமுறை.
எனினும், இலங்கையில் இதுபோன்ற எப்போதும் நடைபெற்றதில்லை. மேலும், அதற்குரிய முறையான ஆய்வுகூட வசதிகளும் கிடையாது.
ஆய்வுகூடம் தொடர்பில் இலங்கை - செம்மணிக்கு வருகைத் தந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒரு ஆய்வுகூடம் அமைப்பதற்குரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஐக்கிய நாடுகளுக்குச் செல்லும் நிதியானது கணிசமான அளவு குறைக்கப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா வழமையாகவே மிக அதிகமான நிதியை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் ஒரு நாடாக இருந்தது. ஆனால் அந்த அளவை தற்போது குறைத்திருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் உறுப்புரிமையிலிருந்தும் கூட அமெரிக்கா வெளியேறியிருக்கின்றது. இந்தளவில்தான் ஐ.நா தற்போது பணியாற்றி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.