அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையின் பொறுப்புக் கூறல், நீதி விசாரணை தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள இந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரமும் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் விசாரணைகள் சர்வதேச தரத்தின் படி நடத்தப்பட வேண்டும் என பிரிட்டன் ஜெனீவா அமர்வில் வலியுறுத்தியும் உள்ளது. அதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட இனப்படுகொலை
தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் செம்மணி மனிதப் புதைகுழியானது ஒரு இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளையும், மிலேச்சத்தனமான நடவடிக்கைகளையும், அரச படைகளின் கொடூர முகத்தையும் வெளிப்படுத்தி இனப்படுகொலையின் சாட்சியாக நிற்கின்றது.
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டு கட்டமாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவுக்கு வந்துள்ளது.

செம்மணி சித்துபாத்தியில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, யாழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய முதல் கட்டமாக 9 நாட்களும், அதன் பின் இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக 54 நாட்கள் முழுமையாக அகழ்வுப் பணிகள் இடம் பெற்றிருந்தது.
இதன்போது 240 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், அதில் 239 எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 72 சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளும் சான்றுப் பொருட்களும் செம்மணி சித்துபாத்தியில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக இடம்பெற்ற திட்டமிட்ட இனப்படுகொலையை வெளிப்படுத்தி நிற்கிறது.
குற்றங்களை விசாரிப்பதற்கு சுயாதீன அலுவலகம்
14 இடங்களில் எலும்புக்கூடுகள் குவியல்களாகவும், சில எலும்புக் கூடுகள் பாகங்கள் உடைவடைந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்த நிலையிலும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை பலர் கொல்லப்பட்டுள்ளனர். இது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் மத்தியிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மனங்களிலும் மேலும் காயத்தையும், ஆறாத வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், செம்மணி சித்துபாத்தியில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன.
இது நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.
கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், மரபணு பகுப்பாய்வு மற்றும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய மரபணு வங்கியை உருவாக்குதல் ஆகியவற்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்
யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி சித்துபாத்தி புதைகுழியை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கு செல்லவில்லை.

அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தெரிவிக்கையில், செம்மணி விவகாரம் நீதிமன்றத்துடன் தொடர்புடையதாகும். நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்திற்கே அறிவிக்கப்படும்.
நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும. நீதிமன்ற நடவடிக்கைகளுக்குரிய வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும். விசேட குழு ஒன்றினால் அதறகுரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ஆகியோரின் குறித்த கருத்தும் வெறும் கண்துடைப்புக்கான கருத்தாக இல்லாமல் உண்மையாவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பரிகார நீதியைப் பெறும் வகையில் நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
குறித்த சம்பவங்கள் தொடர்பான சாட்சிகளைப் பெறுவதற்கு மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை கைதியாகவுள்ள இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச அவர்களையும் பயன்படுத்த முடியும்.
ஏனெனில் செம்மணியில் 300- 400 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்து இருந்ததுடன், செம்மணி புதைகுழி குறித்து சாட்சியமளிக்க தான் தயார் என அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார்.
அவரது சாட்சியங்களின் அடிப்படையில் இதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் என பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும்.
பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா...
படை தரப்பின் வன்ம வெறியாட்டத்தை விசாரிக்க இந்த இலங்கை அரசாங்கம் தென்னிலங்கையில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணியாது இடம் கொடுக்குமா..? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்தும் உள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும். எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் அதற்கான திகதி தீர்மானிக்கபடும். 8 வாரங்கள் அந்த அகழ்வு இடம்பெற வேண்டும் என தற்போது எதிர்பர்க்கபடுகிறது.

இதற்கான நிதி, நிபுணத்துவ சேவை மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் மட்டுமே அந்த அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
அதனை அரசாங்கம் செய்து கொடுத்து நீதியான வகையில் பக்கச் சார்பின்றி விசாரணை நடத்துமா என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் எழுந்துள்ளது.
பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள்
செம்மணி என்பது எவராலும் மறந்து விட முடியாத இடம். அதற்கு காரணம் மாணவி கிருசாந்தி படுகொலை. மாணவி கிருசாந்தி படுகொலையின் 29 ஆம் ஆண்டு நிறைவு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருந்தது.

மரணித்த கிருசாந்தியின் ஆத்மா மற்றும் அங்கு புதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினதும் ஆத்மாக்களும் இன்று அங்கு நடந்த மனிதப் பேரவலத்தை வெளிப்படுத்தி சான்றுகளாக கண் முன்னே வந்து நீதி கேட்கின்றன.
ஆக, இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள செம்மணி சித்துபாத்தி விடயத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது.
பட்டலந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் போன்று செம்மணி விசாரணையும் நீதியான முறையில் பக்கச்சார்பின்றி இடம்பெறுமா? தென்னிலங்கையின் அழுத்தங்களுக்கு அடிபணியாது படுகொலைக்களுக்கு காரணமான படைத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை இந்த அரசாங்கம் துடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 16 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.