சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
சாவகச்சேரி நகரசபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு திகதியிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று(05.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வழக்கு விசாரணையின் பின்னரான தீர்ப்பு எதிர்வரும் ஆக்ஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிரான மனுதாக்கல்
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஞானப்பிரகாசம் கிஷோரை வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.
இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பு
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன.
மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள் சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று(05) வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர்வரும் ஆக்ஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வமானதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.
இழப்பீட்டு தொகை குறிப்பிடாமல் கடிதத்தில் கையொப்பம் வாங்க முயற்சி - தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம்