குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணைத்து கொள்ளுமாறு கோரி சார்ள்ஸ் எம்.பி கடிதம்
குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்து கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ஆலய பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து அகழ்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும்,
உங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் 2021.01.18 அன்று அகழ்வு பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைகப்பட்டதுடன் தாங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்.
அதன்போது இந்து கடவுளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருந்ததுடன் அகழ்வு பணியில் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ, யாழ். பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் ஆராய்ச்சி உதியோகத்தர்களையோ உள்வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும், நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.
ஆராய்ச்சி பணி வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். எனவே யாழ். பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும், யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளும்படி தங்களை கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சம்பந்தபட்ட அமைச்சருடனும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள், சார்ள்ஸ் எம்.பி அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், கடிதத்தில் கோரிக்கையின் படி யாழ். பல்கலைக்கழகத்தினரின் தொல்பொருள் பீடத்தினரையும், யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையும் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.