தேசிய மக்கள் சக்தி அமைச்சருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் செய்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் களஞ்சியசாலையில் காப்பட் இடும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமான முறையில் வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அவர் ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான ஊழல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்