மே 09 வன்முறையைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கம் கோரும் நீதிமன்றம்
கடந்த ஆண்டின் மே 09 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைகளை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் அது தொடர்பான அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
மே 09 ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்தவர்கள் மீது குண்டர்களை ஏவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து நாடெங்கும் வன்முறை வெடித்தது.
அதன் போது ஏராளமான அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
வன்முறைச் சம்பவங்கள்
குறித்த தாக்குதல் மற்றும் அதன் பின்னான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை சார்ந்த உயரதிகாரிகள் தங்கள் கடமையிலிருந்து தவறியுள்ளதாகவும் எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
மேன்றையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு
அதன் அடிப்படையில் காஞ்சன விஜேசேகர, பந்துல குணவர்த்தன உள்ளிட்ட அமைச்சர்கள் மேன்றையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேற்குறித்த பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் அதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து வடிவில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.




