வவுனியாவில் தனியார் தாதியர் கல்லூரியில் குழப்ப நிலை : கல்லுரியில் பணியாற்றிய 5 பேர் கைது
வவுனியா, வைரவபுளியங்குளம், 7ஆம் ஓழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் நேற்று(15.06.2026) குழப்பநிலை ஒன்று ஏற்பட்டமையால் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் தனியார் தாதியர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தை திரும்ப செலுத்துமாறு
பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கீகாரமுள்ள சான்றிதழ் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை என மாணவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கல்லூரியின் பணிக்குழுவுக்கும் மாணவர்களுக்கும் இடையில் குறித்த வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது உடனடியாக எமக்கு சான்றிதழ் வழங்கப்படவேண்டும் இல்லாவிடில் நாம் செலுத்திய பணத்தை திரும்ப செலுத்துமாறு மாணவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
அதற்கு பொறுப்பான பதிலை கல்லூரி நிர்வாகிகள் வழங்கவில்லை. இதனால் அங்கு குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து மாணவர்களால் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் கல்லூரியில் கடமை புரிபவர்கள் எனக் கூறப்படும் ஐவரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைக்களுக்காக பாதிக்கப்பட்ட மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடியதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

