அரசியல் கொலைகள் குறித்த விரிவான தகவல்கள் எனக்கு தெரியும்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அசாத் மௌலானா
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து எனக்கு தெரிந்திருந்த தகவல்களிற்கு அப்பால் 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற பல அரசியல் படுகொலைகள் குறித்த பலவிரிவான தகவல்கள் எனக்குதெரியும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்ட ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் அசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த அறிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று மாலை ஊடகங்கள் மூலம் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்தே நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களே உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
கோட்டாபயவுக்கு ஆதரவளித்த பிள்ளையான்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலமும் சிஐடி விசாரணை மூலமும் நான் சந்திக்க வேண்டும் என சுரேஸ் சாலே விரும்பிய நபர் ( தாக்குதல் இடம்பெற்ற அன்று காலை) ஜமீல் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
அவர் தாஜ்சமுத்திராவில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவர் அங்கிருந்து வெளியேறி தெகிவளையில் உள்ள சிறிய ஹோட்டலில் தன்னை வெடிக்கவைத்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பிள்ளையானும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் ஆதரவளித்தனர்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் சுரேஸ் சாலே இலங்கை திரும்பினார் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இன்றும் அந்த பதவியில் தொடர்கின்றார்.
பிள்ளையானிற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் முன்னாள் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற மறுத்தார்.
2020 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெற்றவேளை பிள்ளையான் தொடர்ந்தும் சிறையிலேயே இருந்தார். பொதுத்தேர்தலின் பின்னர் பிள்ளையான் என்னையும் தனது சகோதரரையும் சுரேஸ் சாலேயை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
விடுதலை செய்யக் கோரிய பிள்ளையான்
கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை மறக்கவேண்டாம். தன்னை விடுதலை செய்யாவிட்டால் அதற்காக கடும் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்குமாறு பிள்ளையான் எங்களை கேட்டுக்கொண்டார்.
சில நாட்களின் பின்னர் சட்டமா அதிபர் மட்டக்களப்பு நீதிமன்றில் பிள்ளையானிற்கு எதிரான வழக்கை விலக்கிக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து எனக்கு தெரிந்திருந்த தகவல்களிற்கு அப்பால் 2005 முதல் 2015 வரை இடம்பெற்ற பல அரசியல் படுகொலைகள் குறித்த பல விரிவான தகவல்கள் எனக்குதெரியும்.
டிரிபோலி பிளட்டுனே இந்த படுகொலைகளில் பலவற்றை செய்திருந்தது. இது இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் இயங்கிய இரகசிய கொலைக்குழு. முதலில் இந்த குழுவிற்கு மேஜர் பிரபாத் புலத்வட்ட தலைமைதாங்கினார். அதன் பின்னர் கேணல் சாமி குணரத்தின இதற்கு தலைமைதாங்கினார்.
அவ்வேளை இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமால் கருணாசேனவின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இந்த பிரிவு செயற்பட்டது. பின்னர் இவர் இராணுவபிரதானியாக பதவி உயர்த்தப்பட்டார். இந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவரிடமிருந்து நேரடி உத்தரவை பெற்று செயற்பட்டனர்.
மேலும் பல தகவல்கள்
யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பல அரசியல் படுகொலைகளிற்கு இந்த குழுவினரே காரணம். படுகொலைகள் பத்திரிகையாளர்கள் படுகொலைகளிற்கு இவர்களே காரணம். குறிப்பாக இவர்களே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப்பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் போன்றவர்களின் கொலைகளிற்கு காரணம்.
மேலும் லசந்த விக்ரமதுங்க, சிவராம், நடேசன் படுகொலைக்கும் டிரிபோலி பிளட்டுனே காரணம். கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட ஆகியோர் காணாமல்போனமைக்கும் டிரிபோலி பிளட்டுனே காரணம்.
இராணுவ புலனாய்வு பிரிவினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் இணைந்து செய்த படுகொலைகள் குறித்து மேலும் பல தகவல்கள் என்னிடம் உள்ளன.
அவர்கள் செய்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனது உயிருக்கு ஆபத்து என்பதால் அவர்களிடமிருந்து விலகியும் இருக்கமுடியவில்லை
இந்த நிமிடம் வரை இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தி சிறைப்பிடித்து கொலை கூட செய்வார்கள் என நான்அச்சம் கொண்டுள்ளேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சூத்திரதாரிகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த தவறியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |