சனல் 4 விவகாரம்! சர்வதேச விசாரனை அவசியம் : மனித உரிமை செயற்ப்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ (Photos)
சனல் 4 வெளியிட்ட காணொளி விவகாரம் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையே அவசியம் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மாதவனை - மயிலத்தமடு பண்ணையாளர்கள் இன்று ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ருக்கி பெர்னாண்டோ போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ருக்கி பெர்னாண்டோ,
சமூக மட்டத்தில் நீதி விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மக்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.
நம்பகத் தன்மை இல்லாமல் போயுள்ளது
அது எந்த மதத்தவராக இருந்தாலும் நீதி விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் நாங்கள் பார்க்கின்றோம் பல பிரதேசங்களில் மத தலைவர்கள் நீதிவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அண்மையில் கூட நாங்கள் பார்க்கின்றோம் திருகோணாமலை போன்ற மாவட்டங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் தங்களது கடமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பெளத்த பிக்குகள் செயல்பட்டு கொண்டு வருகின்றார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இவ்வாறு செயல்படுபவர்களுக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டு கொண்டு வருகின்றார்கள்.
சனல் 4 என்பது என்னை பொறுத்தவரையில் இலங்கை தொடர்பாக மூன்றாவது காணொளியை தற்போது வெளியிட்டுள்ளது. இறுதியாக பத்து வருடங்களின் பின் தற்போது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள். என்னை பொறுத்தவரையில் இந்த காணொளியில் வெளிவந்த தகவல் தொடர்பாக எமது அவதானத்தை செலுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
இந்த மூன்று காணொளி தொடர்பாகவும் சுயாதீனமான ஒரு விசாரணை நடத்த வேண்டும் ஆனாலும் இந்த சுயாதீன விசாரணை தொடர்பாக எமது மக்கள் மத்தியில் நம்பகத் தன்மை இல்லாமல் போயுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ஒரு சுயாதீன விசாரணையை நடத்தக் கோரியும் அந்த விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. ஆகவே சர்வதேச விசாரணை ஒன்று வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
ஆனால் அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது சில வாரங்களாக கத்தோலிக்க திருச்சபையின் ஆண்டகை கூட ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்த வேண்டும் என்று தெரிவித்து வருகின்றார்.
வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை தொடர்பாகவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாகவும் தற்போது சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என்பதை பலரும் தெரிவித்து வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.
சனல் 4 காணொளியாக இருக்கலாம், இல்லாவிட்டால் தேசிய ஊடக செய்திகளாக இருக்கலாம் அல்லது பிராந்திய செய்திகளாக இருக்கலாம் யார் செய்கின்றார்கள் என்பது அவசியம் இல்லை. அதனுள் வருகின்ற விஷயங்கள்தான் அவசியமாக இருக்கின்றது.
ஆகவே இது தொடர்பான சுயாதீன விசாரணை உடன் கூடிய சர்வதேச விசாரணை ஒன்றுதான் இதற்கு தீர்வு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |