சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்! கரைச்சி பிரதேசசபை தவிசாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு
கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மணல் விநியோகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஒரு சீரான ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வட்டக்கச்சி, திருவையாறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட மணல், வரும் திங்கட்கிழமை முதல் இரணைமடுக் குளத்தின் உட்பகுதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக சுமார் 3000 கியூப் மணல் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது சொந்த வீடமைப்பு, மலசலக்கூடங்கள் மற்றும் கிணறுகள் போன்ற தேவைகளுக்கும், அரச கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் தங்களது திணைக்களங்கள் மூலமாகவும் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும். (வீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே மணல் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது).
தேவையான ஆவணங்கள்
மணல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மணல் குறிப்பிட்ட இடத்திற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும்.

விலை விவரம்
குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 45,000 வரையிலான விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. களஞ்சியத்திலிருந்து மணலை ஏற்றிவிடும் பொறுப்பு பிரதேச சபையைச் சார்ந்தது. அங்கிருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு விண்ணப்பதாரரைச் சார்ந்தது.
பாரவூர்தி சங்கத்தினர் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியாரும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியும்.
ஜனவரி மாதம் முதல் ‘மணல் யாட்’ (Sand Yard) அமைத்து, உழவியந்திரம் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக மணல் பெற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் இருப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.