ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ஜனாதிபதி அறிவிப்பு (Photos)
அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்று (06) நடைபெற்ற அரச மதிப்பீட்டுத் திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி
18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும்,நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் மேற்கொண்டுள்ள பணிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, அரசின் பிரதம மதிப்பீட்டாளர் புஷ்பா முத்துகுமாரன, தபால்மா அதிபர் ருவன் சத்குமார மற்றும் அரச மதிப்பீட்டுத் திணைக்கள ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.