இலங்கையில் பாடசாலை கல்வி திட்டத்தில் வரப்போகும் மாற்றம்: முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள்
இலங்கையில் பாடசாலைகளில் தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள்
அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என இருவகையான பாடசாலைகள் இனி பேணப்படாமல், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வகையில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மாகாணசபையிலிருந்து மாகாணசபைக்கு மாறாத நிர்வாக முறைமையின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டும் என குழு தீர்மானித்துள்ளது.
பணம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்போது அநீதி இழைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
மேம்படுத்தப்படும் திட்டம்
ஆரம்ப தரம், 6 முதல் 9ம் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பாடசாலைகளை நடத்துவதற்கும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தரம் 12ஆம் தரத்துக்கும், சாதாரண தரம் 10ம் தரத்துக்கும் கொண்டு வரப்பட்டு, ஒரு பிரதான பாடசாலையைச் சுற்றி அமைந்துள்ள 08 பாடசாலைகள் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
இதற்கு மேலதிகமாக, தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |