கிளிநொச்சி - புதுக்காட்டுச் சந்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
கிளிநொச்சி - புதுக்காட்டுச் சந்தியில் ஏற்பட்டுள்ள தற்காலிக மாற்றத்தினால் A9 வீதி வழியே நிகழும் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வழமையான பாதைவழியே பயணிக்க முடியவில்லை.பாதையை விட்டு விலகி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்டை வழியினூடாக பயணிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
A9 வழியே பயணிப்போர் புதுக்காட்டுச் சந்தியில் தங்கள் பயண வேகத்தினை குறைத்து வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கேற்ப தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என A9 வழியே தங்கள் பயணத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலை ஒருமாதகாலத்திற்கு தொடரும் வாய்ப்புள்ளதாக அங்கு பணியாற்றும் மருதங்கேணியைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
புதுக்காட்டுச் சந்தியில் நடப்பது என்ன
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் வழங்கல் திட்டம் என முன்மொழியப்பட்ட திட்டமிடல் ஒன்றின் ஒரு பகுதியாக புதுக்காட்டுச் சந்தியில் A9 பிரதான வீதியை குறுக்கறுத்து நீர்க் குழாய்களை வீதியின் அடுத்த பக்கத்திற்கு கொண்டு செல்வதற்கான கட்டுமானங்கள் நடைபெற்றுவருவதாக செயற்றிட்டத்தினை நெறிப்படுத்தி வரும் பொறியியலாளர் குறிப்பிட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் வழங்கல் திட்டத்தினை தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையால் அமுலாக்கப்படுகிறது." இந்தச் செயற்திட்டத்திற்கான நிதி இலங்கை அரசினாலும் ஆசிய அபிவிருத்தி வங்கியினாலும் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தச் செயற்பாடு தொடர்பான மேற்படி விடயங்களை புதுக்காட்டுச் சந்தியில் நிறுவப்பட்டுள்ள அறிவிப்பு பலகையிலும் குறிக்கப்பட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.
குடி நீர் செயற்திட்டம்
யாழ்ப்பாணத்திற்கான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்காக கடல் நீரை நன்னீராக மாற்றியமைக்கும் முயற்சிகளும் அவ்வாறு பெறப்படும் நீரினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும் குழாய் வழிகளும் அமைக்கப்பட்டு வருகிறதனை அவதானிக்க முடிகின்றது.
தாளையடி கடலில் இருந்து இந்த செயற்பாடுகளுக்கான நீரினை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என மருதங்கேணியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் குடிநீர் திட்டத்திற்காக நீரைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளின் விளைவாக இந்த முன்மொழிவு இப்போது செயல் வடிவம் பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தாளையடியில் இருந்து புதுக்காட்டுச் சந்தி வரையும் பெரியளவான நீர்க் குழாய்களை பொருத்தியுள்ளனர். A9 வீதியினை ஊடறுத்து அடுத்த பக்கத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளே இப்போது நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்
மருதங்கேணியில் இருந்து வருவோரும் A9 வழியே பயணிப்போரும் ஒருசேர வந்து சந்திக்கக் கூடிய இடமாக இது இருக்கின்றது.
பாதை குறுக்கறுக்கப்பட்டுள்ளதால் அதன் மீது பயணிகளால் பயணிக்க முடியவில்லை.தற்காலிகமாக புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைக்கப்பட்டுள்ள பாதை தற்காலிகமானதுடன் இருவழிப் பாதைகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்தினை மூன்று பாதைகளிலும் இருபத்துநான்கு மணி நேரமும் ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தி ஒழுங்கமைத்துள்ளனர். இது பாராட்டுக்குரிய செயற்பாடாக இருக்கின்றது என இப்பாதைவழியே பயணிக்கும் பயணிகளுடன் கலந்துரையாடிய போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
புதிய பாதை உலராதிருப்பதற்காக இடையிடையே நீர் தெளிக்கப்படுவதாகவும் பயணிகளுக்கு எவ்வகையிலும் இடையூறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என தங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியவாறு இருந்த பணியாளர்களுடன் பேசிய போது அவர்கள் குறிப்பிட்டனர்.
பாதைகளை இலகுவாக புரிந்துகொள்ள குறிகாட்டிகளையும் எல்லைப்பட்டிகளையும் பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பயணிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
"2024.02.20 தொடக்கம் 2024.03.30 வரையான காலப்பகுதியில் இருவழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள தற்காலிக வீதியினை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.தடங்களுக்கு வருந்துகிறோம்." என குறிக்கப்பட்டு வேலைத்தள இடத்திற்குள் நுழையும் பாதையின் ஆரம்ப இடங்களில் அறிவுறுத்தலானது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது பாராட்டுக்குரியதாக தான் நோக்குவதாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் இந்த தடங்கல் பற்றிய கேட்டல்களின் போது குறிப்பிட்டார்.
வேலையின் சிரமத்தினை பொறியியலாளர் பயணிகளோடு பேசிய விதம் மனதைக் கவர்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எந்த சிரமமும் இன்றி புதுக்காட்டுச் சக்தியினால் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அவர் தன் பயண அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |