வலி. வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் சந்திரசேகரன் உறுதி
வலி. வடக்கில் பாதுகாப்பு தரப்படும் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
புதிய வேலை திட்டம் ஆரம்பம்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அத்துடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.
வலி. வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண விமான நிலையம் தொடர்பில் விசேட கவனம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி. வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட வருகின்ற நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்