சாணக்கியன், சுமந்திரன் மக்களின் பிரதிநிதிகள்!இரா.துரைரெட்னம்
நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியனும், சுமந்திரனும் மக்கள் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில வன்முறையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் சென்று கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் போது ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வருவது இயல்பு.அதேபோன்று ஆர்ப்பாட்டங்கள்,எதிர்ப்புகள் தெரிவிப்பதும் இயல்பான விடயம்.
புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கொள்கையுடனும் பல்வேறு கட்சியினதும் உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் வெளிநாடு சென்று அவர்களின் கருத்துகளை தெரிவிப்பது என்பது ஜனநாயக செயற்பாடாகும்.அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் என்பது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாகும்.
வெளிநாடுகளில் உள்ள பலர் கருத்துச் சுதந்திரத்தினை ஏற்றுக்கொள்ளும் போது அதனை ஒரு சிலர் புறக்கணிப்பது ஜனநாயகமற்ற செயற்பாடாகும். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்கள் சார்ந்த கட்சியுடன் கலந்துரையாடி இவ்வாறான பயணங்களை முன்னெடுப்பதே கட்சி சார்ந்த செயற்பாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டை எந்தளவுக்கு பின்பற்றினார்கள் என்பது கேள்விக்குறியாகும். எனினும் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கில் மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள்.அதனை சிலர் நிராகரிப்பது எந்தளவுக்கு நியாயமானதாகயிருக்கும் என்பது எனது கேள்வியாகும்.
இவர்கள் இருவரும்
மக்கள் வாக்களித்தே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதை வெளிநாட்டில் உள்ள சில
வன்முறையாளர்கள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
