தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தெராடர்பில் அரசு வழங்கிய வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த ஒரு வருட காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

திருப்தியடையும் ஒரு தீர்வைக் கூட அரசு முன்வைக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும். ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் ஒரு வருடம் நிறைவடையும் போது ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே இந்த மாதம் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் அவசர அவசரமாக அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அவமானப்படக் கூடாது என்பதற்காகவே அவசரமாக ஒருசில அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்குவதற்கு அரசு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை. காணி விடுவிப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அரசு குறிப்பிட்டது. ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
பிரச்சினைக்கான தீர்வு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு, மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கு இந்த அரசு எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அத்துமீறிய மேய்ச்சல்காரர்கள் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாகத் தீர்வு காணுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றோம். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பதாக வாயால் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், செயலில் ஒன்றுமில்லை. வளவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக சுற்றாடல் துறை அமைச்சர் வடக்குக்கு வந்து குறிப்பிட்டார். மூன்று மாதங்கள் கடந்தும் ஏதும் நடக்கவில்லை.
எமது மக்கள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதற்கு இந்த அரசு வழங்கிய பதிலை எம்மால் ஏற்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானக் காணியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. செம்மணி விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மாகாணசபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டார்கள். தற்போது 2026 என்று குறிப்பிடுகின்றார்கள். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி எவ்வித பேச்சும் நடைபெறவில்லை.

எமது மக்கள் கடந்த காட்டிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியாது என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், நீங்கள் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளீர்கள். இதனைத் தொடர்ச்சியாக ஏற்க முடியாது என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan