சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இருவருக்கு எதிரான வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 02) காலை கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பயணித்த வாகனம் ராஜகிரியவில், மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி அதன் ஓட்டுநரின் உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை தொடா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி, முன்னாள் அமைச்சருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன.
இதன்படி, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவரது அப்போதைய சாரதி திலும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக, சாட்சியங்களை பொய்யாக்கியமை மற்றும் மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.