199 ரூபாவிற்கு கப்பலில் ஏற்றப்படும் பெற்றோல் ஏன் 424 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது! சம்பிக்க கேள்வி
அரசாங்கம், எரிபொருள் விலைச் சூத்திரத்தையும் அதன் உள்ளடக்கங்களையும் உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சந்தையில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் செலவிற்கும், உள்நாட்டு நுகர்வோரிடம் அறவிடப்படும் சில்லறை விலைக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதால் இவ்வாறு தகவல் வெளியிடப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளக் கணக்கில் அவர் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். எரிபொருள் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூர் பிளாட்ஸ் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, கப்பலில் ஏற்றும் போது ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 199.00 ரூபாவாகவும், டீசலின் விலை 295.00 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் 424.00 ரூபாவிற்கும், டீசல் 397.00 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பாரிய விலை வித்தியாசத்திற்கான நியாயமான காரணங்களை அரசாங்கம், மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு லீட்டர் எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு 189.00 ரூபா மாத்திரமே செலவாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சுத்திகரிப்பு நிலையம் வரிகளைச் செலுத்தாததன் மூலம் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 32 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இறக்குமதியின் போது விநியோகஸ்தர்களுக்குச் செலுத்தப்படும் 'பிரீமியம்' கட்டணங்கள் உள்ளிட்ட மேலதிக செலவினங்கள் மக்களிடம் மறைக்கப்படுவதாகவும், உண்மையான செலவினங்களை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு உரிய விலைச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய செலவு பிரதிபலிப்பு விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.