சாமர சம்பத் மற்றும் அவரது தனிச் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்
பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.4 மில்லியன் ரூபாயைப் இலஞ்சமாகக் கோரியதாகவும், பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம் இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்ட, குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் தனிச் செயலாளரும் அதே திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்க, கடந்த 2022 செப்டெம்பர் 8 முதல் 2024 செப்டெம்பர் 23 வரை முதன்மைத் தொழில்துறை இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மூன்று நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த வழக்கில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார் என்றும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.