வங்காள விரிகுடாவில் உருவாகும் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி நாட்டிலிருந்து விலகி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதன் தாக்கம் இன்றும் (23) தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
மழை அல்லது இடியுடன் கூடிய மழை
இதேவேளை, ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (23) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கிடையில், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் என்று மேலும் தெரிவித்துள்ளது.