ஈழச்சிறார்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்
ஈழத்தில் வாழும் இளையவர்களின் நினைவாற்றல் பாதிப்படையும் சூழல் தீவிரமடைகின்றது.
கல்வியிலும் அவர்களது வாழ்வியல் பாரம்பரியத்திலும் பெரியளவு மாற்றத்தினை இது ஏற்படுத்தி வருகின்றது.
போசாக்கின்மை, பொருத்தமான உளவள ஆலோசணைகளை பெறமுடியாத சூழல், தூக்கமின்மை ஆகிய காரணிகளால் அவர்களுக்கு இந்நிலை ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
நேற்று நடந்தவற்றைக் கொண்டு இன்று நடப்பவற்றை கட்டமைத்து நெறிப்படுத்தும் போது தான் நாளை நடப்பவை நன்மை பயக்கும் என்ற சிந்தனையில் ஈழத்துச் சிறுவர்கள் தோல்வி நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாலையில் எழ முடியாத நிலை
அதிகமான ஈழத்துச் சிறுவர்களுக்கு அதிகாலையில் துயில் எழுந்து கொள்ள முடியாத நிலை இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பெற்றோரால் அதிகாலையில் துயில் எழுப்பும் போதும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு எழுவோம் என படுத்திருக்க மனம் விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு இரத்தத்தில் ஈமோக்குளோபினின் அளவு குறைவாக இருப்பதே காரணம்.
பல சமயங்களில் அதிகாலையில் எழுந்து கொண்ட போதும் புத்தகங்களை தட்டிப் படிக்க முடியாத நிலை ஏற்படுவதாக மேலும் குறிப்பிட்டுகின்றனர்.
அதிகாலையில் துயில் எழும்போது பலருக்கு தலைவலி, ஒற்றைத் தலைவலி இருப்பதும் அவதானிக்க முடிகின்றது. இவர்கள் வைத்தியசாலை சென்று தங்கள் அசாதாரண நிலையினை கூறி சிகிச்சை பெறக் கோரும் போது நல்ல தூக்கம் வேண்டும் என கூறி மருந்து கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
மீண்டும் அதே பழையை நிலையே தொடர்வதாகவும் அறிய முடிகின்றது. ஆனாலும் ஈமோக்குளோபினின் அளவு குறைவாக இருப்பது தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகாலையில் எழுந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதால் புதியவற்றை கற்பதற்கோ சுய கற்றலுக்கான நேரத்தினை பெறுவதற்கோ முடியாத நிலை ஏற்படுகின்றது.
அளவுக்கதிகமான வீட்டுவேலைகளை கொடுக்கும் பாடசாலைகளாலும் மாலைநேர வகுப்புக்களாலும் மாணவர்களின் கற்றல் வேலைப்பளு அதிகரிக்கின்றது.
அதற்கேற்ற அளவில் உடலில் உள்ள ஈமோக்குளோபினின் அளவும் உரியளவில் பேணப்படுதல் அவசியமான போதும் அது தொடர்பில் இலங்கையின் கல்விச் சமூகத்தில் தெளிவின்மை இருப்பதும் தெரிந்து தெளிவானவர்களிடையே அக்கறையின்மை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கற்றவற்றை பகுப்பாய்வு செய்யாத போக்கு
சிறந்த கற்றல் தேர்ச்சிக்கு கற்றவற்றை பகுப்பாய்வு செய்து குறிப்பெடுத்தல் அவசியம்.
கற்றவற்றை நினைவில் கொண்டிருந்தாலே அவற்றைக் கொண்டு பகுப்பாய்வினை செய்து கொள்ள முடியும்.
சிறந்த பகுப்பாய்வின் மூலமே மனம் கற்றவற்றை தன் மயமாக்கிக் கொள்ளுகின்றது.
பாடசாலைகளிலும் மாலை வகுப்புக்களிலும் மாணவர்கள் கற்பிக்கப்படுகின்றனர்.பல மாணவரிடையே மேற்கொண்ட ஆய்வில் கற்றவற்றை அடுத்த நாளில் மறந்துவிடும் பழக்கம் அவர்களிடையே இருப்பதனை இனம் கண்டு கொள்ள முடிந்தது.
முன் கற்றவற்றை மறந்து விடுவதால் அதனை அடுத்து அதன் தொடர்ச்சியான விடயங்களை கற்பிக்கும் போது புரிந்து கொள்ள முடியாதிருப்பதாக அவர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
இந்த இயல்பானது ஈழத்துச் சிறார்களுக்கு தங்களைச் சூழ நிகழும் செயற்பாடுகளை பகுப்பாய்ந்து பொருத்தப்பாடான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை இல்லாது செய்து விடும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தி வருகின்றது.
வளமான வாழ்வுக்கு பொருத்தமான செயற்பாடுகளூடாக தங்களின் எதிர்கால சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுதலுக்கான திறன் இல்லாத நாளைய ஈழத்து சமூகம் ஒன்றை துறைசார் நிபுணர்களின் அக்கறையின்மை ஏற்படுத்தி விடும் என்பது திண்ணம்.
என்ன காரணம்?
ஈழத்தின் இளம் வயதினரை பாதிக்கும் மறதிக்கும் அதிகாலையில் எழுந்து கொள்ள முடியாத நிலைக்கும் என்ன தொடர்பு?
உடலில் ஈமோகுளோபினின் அளவு குறையும் போது உடல் இழையங்களுக்கு தேவையான ஒட்சிசன் வாயு கிடைக்கும் அளவினை அது குறைத்து விடுகிறது. இதனால் உடல் இழையங்களின் தொழிற்பாட்டுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்து கொள்ள முடியாத சூழல் தோன்றும்.
இது இளையவர்களின் செயற்பாடுகளை பாதிக்கும் பிரதான காரணியாக இருக்கிறது. இதனை சீர் செய்யும் போது புதிதாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.
உடல் இயக்கம் தொடர்பான அறிவாற்றலை அனுபவ அவதானிப்புக்களோடு தொடர்புபடுத்தி பகுப்பாய்வுக்குட்படுத்தினால் இந்த முடிவுகளை பெற முடியும். இது தொடர்பில் வைத்தி நிபுணர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களின் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடிந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு குழு மாணவர்களை தெரிவு செய்து மேற்கொண்ட ஈமோக்குளோபினின் சதவீதத்தினை அவர்களின் உடலில் உச்சளவில் பேணிய போது தலைவலி, ஒற்றைத்தலைவலி, அதிகாலையில் எழுந்து கொள்வதில் இடர்பட்ட நிலை,மறதி போன்ற பாதிப்புக்களிலிருந்து அவர்கள் மீண்டு வந்ததனை அவதான முடிவாக பெற முடிந்திருந்ததும் நோக்க வேண்டிய ஒன்றாகும்.
சாதாரண நிலையில் உள்ள ஒரு இளையவரில் ஏற்படும் மேற்படி பாதிப்புக்களை ஆரம்ப நிலையில் அவர்களின் குருதியில் உள்ள ஈமோக்குளோபினை அதிகரிப்பதன் மூலம் சீர்செய்ய முடியும்.
மனநிலைப் பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு அவர்களுக்கான பொருத்தமான உளவள ஆலோசனைகளை வழங்குவதோடு உடலின் போசாக்கினை உயர்தரத்தில் பேணவேண்டியதும் அவசியமாகும்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின்படி சிறந்த பழக்கவழக்கங்களை உடல் உள சமூக ஆரோக்கியம் சார்ந்தாக ஆரம்பம் முதலே இளையவர்களிடத்தில் ஏற்படுத்தி பழக்கப்படுத்தினால் ஈழத்து இளையவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நல்ல தீர்வினைக் காணலாம்.
ஈமோக்குளோபினை (Hb) கூடிய நிலையில் பேணும் வழிகள்
உடலில் ஈமோக்குளோபினின் சதவீதம் பத்துக்கு மேல் இருக்கும் போது மட்டுமே குருதிக்கொடையாளர்களிடமிருந்து குருதியை பெற்றுக்கொள்ளும் வழக்கத்தினை இலங்கையில் உள்ள இரத்த வங்கிகள் கொண்டுள்ளன.
ஈமோக்குளோபினின் உயர் அளவாக ஒருவரது உடலில் பதினாறு சதவீதம் இருக்க வேண்டும். உயர் ஈமோக்குளோபினின் பேணல் இருக்கும் போது நீண்ட நேரம் நித்திரை விழித்து தம்மால் வேலைசெய்ய முடிவதாக இரவு நேர வேலைகளில் (வெதுப்பக ஊழியர்கள், இரவு நேரக் காவலாளிகள்) ஈடுபடுவோரிடையே மேற்கொண்ட ஆய்வில் அறிய முடிந்தது.
பத்து நிமிடத்தினால் நித்திரை விட்டு எழ வேண்டும் என நினைத்துக் கொண்டு குட்டித்தூக்கம் போட்டால் மற்றொருவருடைய உதவியில்லாமல் சரியாக பத்து நிமிடத்தினால் தன்னால் நித்திரை விட்டு எழ முடிகிறது என ஒரு ஆசிரியரும் பங்குச்சந்தை முதலீட்டாளருமான ஒருவர் குறிப்பிட்டார். அவர் போல பலரிடமும் இத்தகைய இயல்புகளை அவதானிக்க முடிகின்றது.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம்,சிவப்பு இறைச்சி, கீரைகள், பழங்கள் என இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களாக அவர்கள் இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
84 வயதில் சுறுசுறுப்பாக இருக்கும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் காலையில் பழங்கள், பழவற்றல்களை மட்டும் உண்ணும் பழக்கமுள்ளவராக இருப்பதும் ஆய்வின் போது கவனிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவருடனான உரையாடலின்போது அதிகமான பழங்கள், பழவற்றல்களை உண்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.வெளிநாட்டுப் பயணங்களை அதிகம் மேற்கொள்ளும் இவர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியாக ஆலோசகராகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நேரத்தில் அதிகமாக உண்ணாது இடையிடையே ஒவ்வொரு உணவு வேளைக்கு இடையிலான நேரத்தின் இடைவெளியினையும் அவர்கள் குறைவாக பேணியிருந்ததனையும் அவதானிக்க முடிகின்றது.
இளையவர்களிடையே ஈமோக்குளோபினின் அளவினைக் கூட்டுவதற்காக இரும்புச் சத்து உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்துவதோடு பாடசாலைகளிலும் இரும்புச்சத்து வில்லைகளை மாணவர்களுக்கு குடிக்க கொடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
ஈழத்து இளையவர்களிடையே உள்ள குறைபாடு
அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்கும் பழக்கம் மாணவர்களிடையே அருகி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
உணவுப்பழக்கம் சூழலுக்கு பொருத்தப்பாடானதாக இல்லாது இருப்பதோடு பாடசாலைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து வில்லைகளை விழுங்கிக் கொள்ளாது எறிந்து விடுவதனையும் தேடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாடசாலை மாணவரிடையே ஏற்படும் எதிர்ப் பாலின கவர்சியினால் ஏற்படும் காதல்களினாலும் அறிவுறுத்தல்களை மதித்து நடக்காத பழக்கம் மேலோங்குவதாக வடக்கின் பல பிரபல பாடசாலை ஆசிரியர்கள் பலருடன் உரையாடியதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாளை தோன்றும் ஈழத்தின் புதிய தலைமுறை புத்திசாலித்தனமாற்றதாக இருந்து விடுமோ என்ற பயம் ஈழ தேச ஆர்வலர்களிடம் தொற்றிக் கொண்ட புதிய சிக்கலான விடயமாக இது மாறியுள்ளதும் நோக்கத்தக்கது.