முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படப் போகும் சவால்கள்
நாட்டில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.2000 ஆம் ஆண்டில், மொத்த மக்கள் தொகையில் 6.6 வீதமாக இருந்த முதியோர் எண்ணிக்கை, தற்போது 18.2 வீதமாக அதிகரித்துள்ளதாக சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி 2041 ஆம் ஆண்டுக்குள், மொத்த மக்கள் தொகையில் அண்ணளவாக 25 சதவீதம் அல்லது மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு பேர் முதியவர்களாக இருப்பார்கள்.
எனவே, ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் பல சவால்கள் உள்ளன.
எதிர்கொள்ளும் சவால்கள்
தேசிய முதியோர் செயலகத்தில் நடத்திய அதிகாரிகளுக்கான விளக்கமளிக்கும் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
முதலில், முதியோர் என்ற சொல்லை மறுவரையறை செய்வது அவசியம். நாம் உடல் ரீதியாகப் பார்க்கும் வயதையும், சமூக ரீதியாகப் பார்க்கும் வயதையும், குறிப்பாக சுகாதார சேவைகளின் வளர்ச்சியுடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அன்பான இதயம் இல்லாமல் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள முடியாவிட்டால் முதியோர்களுடன் பணியாற்ற முடியாது. கடந்த காலத்தில், முதியோர்களைப் பராமரிப்பது அரச அதிகாரிகளின் வேலையாக இருக்கவில்லை.
சமூகத்தில் ஏற்பட்ட பிறழ்வுகள், குடும்பத்தில் உள்ள முதியோர்களைப் பராமரிப்பது, அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்குவது இழக்கப்பட்டுள்ளது.
நமது சமூகம் கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக நிறுவனமயமாக்கப்பட்ட பராமரிப்பை நோக்கி திரும்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.