சிறு தேயிலைத் தோட்ட விவசாயிகளை வலுப்படுத்த சிலோன் தேயிலை கிராமம் திட்டம் முன்னெடுப்பு
இலங்கையின் சிறு தேயிலைத் தோட்ட பயிர்ச்செய்கையாளர்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன், 'சிலோன் தேயிலை கிராமம்' (‘Ceylon Tea Village’) என்ற திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும், 400 மில்லியன் கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார திட்டங்கள்..
பெருந்தோட்ட, சமூக உள்கட்டமைப்பு அமைச்சு , சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI), இலங்கை தேயிலை சபை மற்றும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், நாடு முழுவதும் சுமார் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முன்னெடுப்பானது, பச்சைத் தேயிலை விளைச்சலை அதிகரித்தல், சிறு விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட தேயிலைப் பொருட்களை அறிமுகப்படுத்துதல், தேயிலைச் சாகுபடியை சுற்றுலாவோடு ஒருங்கிணைத்தல், நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலை விளையும் கிராமங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை நிறுவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் 144 தேயிலைக் கிராமங்கள் நிறுவப்பட உள்ளதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள 144 தேயிலைக் கிராமங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.