மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
எழுபது வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை மீள்திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்க மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து தீர்மானித்துள்ளனர்.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் எதிர்பபை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் நிதிக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.
மத்திய வங்கியின் தீர்மானம்
இருப்பினும், மேற்படி தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு நிதிக்குழு பரிந்துரைத்துள்ளதுடன், குழுவானது கடந்த 20 ஆம் திகதி குறித்த பரிந்துரையை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கும் முன்னரே மேற்படி தீர்மானத்தை குழுவிடம் தெரிவித்திருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பள அதிகரிப்பு குறித்து பரிசீலிக்க நிதியமைச்சரால் சுயேச்சையான குழுவொன்றை உடனடியாக நியமித்து நான்கு வாரங்களுக்குள் நிதிக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |