மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் மற்றுமொரு சலுகை: சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றதாக எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச ஊழியர்கள் 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு போராட்டம் நடத்தியபோது அதனை மேற்கொள்ள இடமளிக்காமல் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை 70 வீதமாக அதிகரித்துக்கொண்டுள்ளது.
இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு சட்டத்துக்கு முரணானதாகும்.
வங்கி கடன்
நாட்டில் பாெருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கி செயற்படுத்துகின்ற நடவடிக்கைகளை அடிப்படையாக்கொண்டே நாட்டின் ஏனைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயற்படுத்துகின்றன.
மத்திய வங்கியில் தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடனுக்கு நூற்றுக்கு ஒரு வீதமே அறவிடப்படுகின்றது.
ஆனால் நாட்டின் ஏனைய சாதாரண மக்கள் வங்கிகளுக்கு சென்று கடன் பெற்றால் அவர்களுக்கு வட்டி நூற்றுக்கு 20.5 வீதமாகும். அதனால் தான் மத்திய வங்கிக்கு சுயாதீனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போது, அதில் ஓரளவு சுயாதீனம் வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம்.
அத்துடன் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கு இவர்கள் வந்தபோது, அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்டதற்கு, கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே இதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
ஆனால் மத்திய வங்கி, மத்திய வங்கி தொழிற்சங்கங்களுடன் அவ்வாறான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதா என எமக்கு தெரியாது. ஆனால் தொழில் திணைக்களத்தில் அவ்வாறான ஒன்று பதிவு செய்யப்பட்டதில்லை.
சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம்
மத்திய வங்கியும் மத்திய வங்கி தொழிற்சங்கங்களும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்குத் தொழில் ஆணையாளரின் அனுமதி பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், அது சட்ட பூர்வமானதல்ல. அப்படியானால் சம்பள அதிகரிப்பு சட்ட ரீதியானதல்ல.
அத்துடன் நாட்டில் ஏனைய திணைக்களங்களான பெற்றொலியம், துறைமுகம், மின்சார சபை எனப் பல நிறுவனங்கள் அதன் நிர்வாக அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொண்டு பதிவு செய்துகொண்டுள்ளவர்களுக்குக் கூட தங்களுக்கு தேவையான முறையில் சம்பள அதிகரிப்பு செய்துகொள்ள இந்த அரசாங்கம் இடமளிப்பதில்லை.
அத்துடன் வாழ்வதற்கு வழியில்லை என தெரிவித்து 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி தொழிற்சங்கங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தின. ஆனால் அந்த போராட்டக்காரர்களுக்கு கண்ணீர்ப் புகை அடித்து விரட்டினார்கள்.
ஆனால் நூற்றுக்கு 60,70 என மத்திய வங்கி தங்களின் சம்பளத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது. அதனால் இவ்வாறான அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |