இலங்கையில் அமெரிக்க டொலரின் கையிருப்பு நிலை
இலங்கையிடம் தற்போது கையிருப்பிலுள்ள அமெரிக்க டொலர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் அமெரிக்க டொலர்களின் கையிருப்பு 937 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் மேலும், சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின் படி நிதியுதவி வழங்கி வருகிறது.
அதன்படி இலங்கையினால் 787 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த நிதியுதவி மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வலுவடைந்துள்ளது.
அத்துடன் பங்களாதேஷ் மத்திய வங்கியுடனான பணப் பரிமாற்ற ஒப்பந்தங்களின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு இணங்க பெறப்பட்ட 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இலங்கை பொருளாதாரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் தொற்று காரணமாக பல நாடுகள் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு இலக்காகிய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் மீள்செலுத்தல் உரிமைகளின் படி நிதியுதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.