செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து அறிக்கையை வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர்
நாட்டின் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) புதன் கிழமை, செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஊடகங்களுக்கு பதில்களை வழங்குவார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alagaperuma) தெரிவித்திருந்தார்.
கடந்த செவ்வாய் கிழமை நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டளஸ் இதனை கூறியிருந்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் ஊடகங்களை சந்திப்பார் எனவும் அப்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணி சம்பந்தமாக விரும்பிய கேள்விகளை கேட்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அஜித் நிவாட் கப்ரால் நடத்துவார் எனக் கூறப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன் கிழமை நடைபெறவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், அப்படியான செய்தியாளர் சந்திப்பை நடத்துவதாக தான் கூறியிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பானது வருட இறுதிக்குள் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கூறிய அறிக்கை ஒன்றை மத்திய வங்கி நேற்று ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.