சட்டவிரோத சொத்துக் குவிப்புக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி அதிரடி - 6 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்
ஆறு நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிதி வியாபாரத்தில் ஈடுபட்டமை மற்றும் வைப்புகளைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஆறு நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் பணிப்பாளர்களின் சொத்துக்கள், ஏனைய வளங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது கையாளுவதையோ தடுக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
6 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்
2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிசெய்து, நீடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. கசகல கிரீன் பிளான்டேஷன் (தனியார்) நிறுவனம் (Kasagala Green Plantation (Private) Limited)
2. சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் (தனியார்) நிறுவனம் (Ceylon Green Life Plantation (Private) Limited)
3. சிங்க கெபிட்டல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் (Singhe Capital Investment Limited)
4. புரோ ஷொப் அட்வர்டைசிங் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம் (Pro Shop Advertising Holdings (Private) Limited)
5. ஏதென்ஸ் இன்டர்நேஷனல் எஜுகேஷன் சென்டர் (தனியார்) நிறுவனம் (Athens International Education Centre (Private) Limited)
6. இயோன் லங்கா இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பிலிம் புரொடக்ஷன் இன்டர்நேஷனல் (தனியார்) நிறுவனம் (Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited) கசகல கிரீன் பிளான்டேஷன் மற்றும் சிலோன் கிரீன் லைஃப் பிளான்டேஷன் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் எதிராக நிதி வியாபாரச் சட்டத்தின் 42 ஆம் பிரிவின் கீழ் தற்போது சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத சொத்துக் குவிப்பு
பட்டியலில் உள்ள ஏனைய நான்கு நிறுவனங்களும் நிதி வியாபாரச் சட்டத்தின் 2 ஆம் பிரிவை மீறி, சட்டவிரோதமாக நிதி வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் பொதுமக்களிடம் இருந்து வைப்புகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கி ஏற்கனவே உறுதிசெய்துள்ளது.
சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பணத்தை வைப்பு செய்யுமாறு மத்திய வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.

வங்கிச் சட்டம் அல்லது நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அல்லது அச்சட்டங்களின் கீழ் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொதுமக்களிடம் இருந்து வைப்புகளைப் பெற சட்டப்பூர்வ உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அனுமதி பெறாத நிதி வியாபாரங்கள் மற்றும் வைப்புச் சேகரிப்புகள் குறித்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மேலும் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.