ஜனாதிபதி தலைமையில் பொதுச்சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா! மைத்திரிபாலவும் பங்கேற்பு
இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமாகியுள்ளது.
362 இற்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள்
தற்போது இப்பெரிய வலையமைப்பு 362 இற்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை கொண்டு விரிவடைந்துள்ளது.

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.
நூற்றாண்டு நினைவு மலர் மற்றும் இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகள் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






