வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் தேசிய தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பு
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுதந்திர தினத்தை பெரும் போராட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுடன் கரி நாளாக தமிழர்கள் அனுஷ்டித்தனர்.
"இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர் தாயகத்தின் கரிநாள்" என்ற தொனிப்பொருளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பாரிய பேரணிகளும் போராட்டங்களும் இடம்பெற்றது.
அத்தோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டங்கள்
இந்த போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
காணாமல் போன எமது உறவுகள் எங்கே, கையளிக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே , சர்வதேச விசாரணை தேவை , சர்வதேச சமூகமே பதிலளிக்க வேண்டும், வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம்” போன்ற முழக்கங்கள் போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலிருந்து போராட்டப் பேரணி தொடங்கியது.
இதில் பெண்கள், சிறுவர்கள், இளையோர், முதியோர், மாணவர்கள் என்று சமூகத்தில் பல்தரப்பினரும் கருப்பு கொடிகளை ஏந்தி, தலையில் கறுப்பு பட்டியை கட்டி கலந்துகொண்டனர்.
இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர் தாயகத்தின் கரிநாள், தமிழர்களின் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை பேரணியில் முன்னால் சென்றவர்கள் ஏந்திச் சென்றனர்.
இந்த பதாதைகள் கறுப்பு நிற பின்புலத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் எழுத்துக்களை கொண்டிருந்தன. அது மாத்திரமின்றி இலங்கை அரசின் சின்னமான மூன்று கால்களில் நிற்கும் படியும் மற்றொன்றில் வாள் ஏந்திய சிங்கமும் இடம்பெற்றிருந்தது.
மஞ்சள் நிறத்தில் இருந்த சிங்கத்தின் கையிலிருந்த வாள் இரத்தம் சொட்டுவது போலவும், சிங்கத்தின் குரள்வளை பகுதியில் இரத்தம் தெறித்திருப்பது போன்றும் அந்த பதாதைகளில் வரையப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழரின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி, மற்றும் கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, என எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
கண்டன கோசம்
இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை தேடுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் அமைக்கபட்ட வடக்கு-கிழக்கில் செயற்படும் சிவில் சமூக அமைப்பான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தின் பங்குபற்றினர்.
அவர்கள் ஏந்திச் சென்ற பதாதைகளில் ஓ.எம்.பி ஒரு கண் துடைப்பு நாடகம், சர்வதேச நீதி விசாரணையே நாங்கள் கோருகிறோம் என்ற பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தையும், உள்ளக விசாரணையையும் நிராகரிக்கிறோம் என்று கோசமிட்டனர்.
எந்தவொரு ஒற்றையாட்சி யாப்பின் கீழான அரசியல் தீர்வை நாங்கள் நிராகரிக்கிறோம், ஓ எம் பி ஒரு கண் துண்டைப்பு, எமக்கு சர்வதேச விசாரணை தேவை” என்று அவர்கள் ஏந்தியிருந்த அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன.
தமிழ் அரசியல் போராட்டங்களின் ஒரு முக்கியப்புள்ளியான யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னர் பெருந்திரளான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. யாழ்.பல்கலைக்கழகத்தின் உட்பகுதியில், ஒரு கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, அந்த கம்பத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டதை காணொளிகள் வெளிப்படுத்தியுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தின் முன்னர் திரண்டிருந்த மாணவர்களும், சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்களும் இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
மேலும், பல்கலைக்கழகத்தின் முன்னால் அணிவகுத்து நின்ற மாணவர்கள் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசிற்கு எதிராகவும் கண்டன கோசங்களை எழுப்பினர்.
“தேர்தலுக்கு முன்- அரசியல் கைதிகளை விடுவிப்போம், தேர்தலுக்கு பின் அரசியல் கைதிகள் இல்லை, தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரினர்.
இராணுவமே வெளியேறு, ஒரு பக்கம் ஆக்கிரமிப்பு மறுபக்கம் வெளியேற்றம், மேலும், குருந்தூர்மலை எங்கள் சொத்து, மைலத்தமடு-மாதவனை எங்கள் சொத்து, தையிட்டி எங்கள் சொத்து, வெடுக்குநாறி எங்கள் சொத்து போன்ற முழக்கங்களையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எழுப்பினார்கள்.
சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
மட்டக்களப்பின் செங்கலடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கொம்மாந்துறை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நிறைவடைந்தது.
தமிழ் அரசியல் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இதில் பங்கேற்றனர்.
கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சிங்கள விவசாயிகளால் வலிந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை தமிழ் பால் பண்ணையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அங்கு இடம்பெற்ற பேரணியின் முடிவில் அதில் பங்குபற்றியவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
“தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சமஸ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு வழங்க இந்த அநுர அரசாங்கம் முன்வர வேண்டுமென்று இந்த கொம்மாந்துறையில் வீற்றிருக்கும் எம்பெருமாளுக்கு முன் சத்தியம் செய்து நாங்கள் இந்த தேங்காய் உடைத்து நாங்கள் இந்த போராட்டத்தை நிறைவு செய்கின்றோம் என்று பேரணியில் பங்கேற்றவர்கள் “அரோகரா, அரோகரா” எனக் கூறி தேங்காய்களை உடைத்தனர்.
தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் சர்வதேச சமூகத்திடம் 14 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.
2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. தமிழர் தாயகம் மீதான பௌத்த மயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.
5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.
8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
10 எமது நிலம் எமக்கு வேண்டும்.
11. தாயகம், தேசியம், சுய நிர்ணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்.
12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.
14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/120f48c4-61fa-45a2-b96f-592ee794282f/25-67a360c99a530.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/45946175-6402-4f16-8131-9983debf69ac/25-67a360ca3a939.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/924d828c-ac4a-46b9-9ceb-c9802004c6e2/25-67a360cac41fb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/23138305-cff9-4dd0-922a-621b96f55f17/25-67a360cb551df.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/81bed36f-5623-42fb-8c7a-9d34c75ae170/25-67a360cbe032a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1963cc54-1779-4af6-b410-3c76057bbad0/25-67a360cc7cec0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b4b03b50-a900-4e4e-98c2-b9bfa581a208/25-67a360cd0d758.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ad416b49-aa3e-4362-9cd8-f14d4a62909f/25-67a360cd93520.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ab5af7fa-643b-4cfd-8036-7919c6d54231/25-67a360ce2441c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6b76a9ac-80ae-40f0-bf9b-e9d33f0e6500/25-67a360ceab1d0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7f2bc9e1-8615-42a2-95fe-73a0684ee8c8/25-67a360cf36538.webp)