கொழும்பில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு - வெளியிடப்பட்டுள்ள விளக்கம்
ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளி தொடர்பில் இராணுவத்தினர் உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட இராணுவத்தினர், “ தடுப்பு உத்தியாக வானத்திலும், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் பிரதான வாயிலின் பக்கவாட்டு சுவரிலும் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் மீது துப்பாக்கி சூடு
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் போராட்டக்காரர்களுக்கு உடலில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரவி வரும் காணொளிகள் தொடர்பில் இராணுவத்தினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான சமூக ஊடகச் செய்திகளை இராணுவம் கடுமையாக நிராகரித்துள்ளது.
இராணுவத்தினர் விளக்கம்
மேலும் போராட்டக்காரர்கள் வளாகத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவம் வானத்தை நோக்கியும், வளாகத்தை நோக்கியும் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதும், வாயில்களின் பக்கவாட்டுச் சுவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் ஒரு தடுப்பு உத்தியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், எதிர்ப்பாளர்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்த திட்டமிடவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.