குப்பை கொட்டுவோருக்கு தண்டம்! வடக்கு ஆளுநரின் அதிரடி முடிவு
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சு, அதன் கீழான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கிய மாதாந்தமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (06.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.
மீளாய்வுக் கூட்டம்
நல்லூர் பிரதேச சபை இவ்வாறு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சுமார் 8 இலட்சம் ரூபா தண்டத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக 852 வேலைத்திட்டங்கள், 6,955 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடைக்குளத்தில் 28,000 கன மீற்றர் மண் தூர்வாரி அகற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பல உள்ளூராட்சி மன்றங்களிலும் குளங்கள் தூர்வாருதல் மற்றும் வாய்க்கால்களைத் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான கட்டடங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் குடிபுகு சான்றிதழ் கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலதிக கலந்துரையாடல்
யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் குடிபுகு சான்றிதழ் பெற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டட விஸ்தரிப்புகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரின் மையப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற வீதியோரக் கடைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர சபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நாளின் இறுதியாக புறப்படும் பேருந்துகளின் சேவை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையுடன் மேலதிக கலந்துரையாடல் நடத்தி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
