கொழும்பில் இன்று முதல் புதிய நடைமுறை : சாரதிகள் அவதானம்
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று முதல் CCTV காட்சிகளை பயன்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் CCTV காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டுகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதி
அத்துடன், தூர பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு வரும் சாரதி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறினால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸாரின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த முறைமையின் கீழ் கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் இன்று முதல் 108 CCTV கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
அறிவிப்பு பலகை
இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதற்கமைய, கொழும்பு நகருக்குள் நுழையும் 09 இடங்களில் அறிவிப்பு பலகைகளை பொருத்துவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.