வாகனக் கடன்களுக்கான விதிகளில் அதிரடி மாற்றம்
இலங்கையில் வாகனக் கொள்வனவுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் வரம்பை மேலும் குறைத்து, வாகன நிதியளிப்பு விதிகளினை இலங்கை மத்திய வங்கி மேலும் கடுமையாக்கியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய உத்தரவின்படி, பல்வேறு வாகனங்களுக்கான அதிகபட்ச கடன் வழங்கும் வரம்புகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான கடன் வரம்பு 60% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.(இதற்கு முன்னர் 2025 நவம்பரில் இது 70% ஆக இருந்தது).
மோட்டார் கார்கள், எஸ்யூவி (SUV) ரக வாகனங்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் (Three-wheelers) மற்றும் இதர வாகனங்களுக்கான நிதியளிப்பு வரம்பு 40% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. (முன்னர் 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் கீழ் இது 50% ஆக இருந்தது).
இந்த புதிய விதிகள் அனைத்தும் இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாத (Unregistered) வாகனங்களுக்கும், முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆன வாகனங்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் முதன்முறை பதிவு செய்யப்பட்டு ஓராண்டிற்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் அதிகபட்சமாக 60% மட்டுமே கடன் வழங்க முடியும். தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வரும் வாகனங்களுக்கு இந்த புதிய விதிகளில் இருந்து சில இடைக்கால விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கியின் அறிவிப்பின்படி, 2025 நவம்பர் 08 முதல் 2026 மே 25 வரையான காலப்பகுதியில் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, பழைய விதிகளின் படியே (கூடுதல் வரம்பில்) கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 105(1) பிரிவின் கீழ், உரிமம் பெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மேக்ரோபிரூடென்ஷியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri