குப்பைமேடு தீக்கிரையாகி புகை வெளியேறுவதால் சிரமத்தில் மக்கள்! சீர்செய்து தருமாறு கோரிக்கை (VIDEO)
மட்டக்களப்பு - திருப்பெருந்துறை பகுதியில் உள்ள குப்பைமேடு தீக்கிரையமாகியதால் ஏற்பட்டும் புகை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதால் அதனை சீர்செய்து தருமாறு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
அருகில் உள்ள தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் நேற்று இந்த நிலையை சீர்செய்து தருமாறு உரியவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
திருப்பெருந்துறை திண்மகழிவு முகாமைத்துவ நிலைய வளாகத்தில் கடந்த 13 ஆம் திகதி ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாணவர்கள்
அதனை தொடர்ந்து தீயினை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போதிலும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திலிருந்து வெளியேறும் புகை காரணமாக அருகில் உள்ள தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குப்பை மேட்டிலிருந்து வெளியேறும் புகை சுவாசத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதன் காரணமாக தம்மால் கற்றல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக அருகில் உள்ள தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் திண்மக்கழிவு அண்டிய பகுதியில் உள்ள பொதுமக்களும் இதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
கொடுவாமடுவில் குப்பைகொட்டுவதற்கான இடம் வழங்கப்பட்டுள்ள போதும் இந்த திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதனால் இந்த பாதிப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகரசபை முதல்வரின் கருத்து
அந்த பகுதியில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் எனவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகள் கொட்டப்படுவதில்லையெனவும் உக்கும் கழிவுகள் கொண்டுவரப்பட்டு மீள்சுழற்சி செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குப்பைகளை தனியார் துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வழங்கும்போது இங்கு கழிவுகள் கொண்டுவரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




