ஜெனீவாவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்குரல்
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்குரல் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.
கொழும்பு ஷங்க்ரி-லா விருந்தகத்தில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த 20 வயதான ஊழியர் விஹங்க தேஜந்தவின் தந்தை சுராஜ் நிலங்க, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் சார்பாக உரையாற்றினார்.
நீதிக்குரல்
அவரது உரையில், “தாக்குதலை நடத்தியவர்கள் மட்டுமல்லாமல், பின்னணியில் இருந்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும்” என வலியுறுத்தியதுடன், ஒரு சுயாதீனமான, விரைவான, முழுமையான குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவி ஏற்றுத் தற்சமயம் ஓராண்டு கடந்த போதிலும், பாதிக்கப்பட்டோர் நீதி பெறும் நம்பிக்கைகள் மங்கிக் கொண்டிருப்பதாகவும், மூளையாக செயல்பட்டவர்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், தாக்குதல்களுக்கு முன் கிடைத்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதையும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததையும் கடுமையாக விமர்சித்த சுராஜ் நிலங்க, இதனால் நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் மற்றும் விருந்தினர்கள் உயிரிழக்க நேரிட்டதாகக் குறிப்பிட்டார்.
பொருளாதார, சமூக, உளவியல் ஆதரவு உட்பட முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், இலங்கை அரசு சர்வதேச வழிமுறைகளுடன் ஒத்துழைத்து உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.




