புற்றுநோயாளர்கள், மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பமான நடைபயணம்
இலங்கையை சுற்றிவருவதற்காக நடைபயணம் ஒன்றை ஆரம்பித்த மாத்தறை - தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கிலேயே இந்த நடைபயணத்தை கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் (30.01.2023) மட்டக்களப்பை சென்றடைந்துள்ளார்.
நடைபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகள்
மட்டக்களப்பை சென்றடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
இலங்கையின் வரைபடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன், அந்த நடைபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்படும் ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கிய பொதியை வழங்கவுள்ளேன்.
இதற்கு முன்மாதிரியாக தனியாக இந்த சுற்று நடைபயணத்தை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி ஆரம்பித்து அலாவத்தை, புத்தளம், கல்பிட்டி, நொச்சியாகம ஊடாக தலைமன்னார் சென்று, அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம், பருத்தித்துறை சென்று, அங்கிருந்து பரந்தன், முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பிற்கு நேற்று (30.01.2023) 1,200 கிலோமீற்றர் தூரம் நடையாக வந்தடைந்துள்ளேன்.
இணைந்து பயணிக்க அழைப்பு
இங்கிருந்து அக்கரைப்பற்று, பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை, கதிர்காமம் சென்று அங்கிருந்து மாத்தறை ஊடாக 2 ஆயிரத்து 200 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இலங்கையை சுற்றிவரும் நடைபயணம் கொழும்பு காலிமுகத்திடலை சென்றடையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி உபகரணம் தேவைப்படும் பாடசாலை மாணவர்களை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன், நடைபயணம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை தனக்கு மக்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் இதில் இணைய விரும்புவோர் தன்னோடு இணைந்து பயணிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
