போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து! கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள தகவல்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து இலங்கையின் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் திருச்சபைக்கு, அந்த போதகருடன் எவ்வித தொடர்பும் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திருச்சபை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மக்களுக்கு தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற உரிமை இருந்தாலும் மற்றுமொரு மதத்தையும் அவர்களது நம்பிக்கையையும் விமர்சிக்கவும் நிந்திக்கவும் உரிமை இல்லை.
இலங்கையில் ஏற்பட்ட இன கலவரங்கள்
பல்வேறு தீவிரவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளினால் கடந்த காலங்களில் பகிரப்பட்ட கருத்துக்கள் காரணமாக இலங்கையில் பல இன கலவரங்கள் ஏற்பட்டிருந்தன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் கிறிஸ்தவ மத போதகரான ஜெரோம் பெர்னாண்டோ தமது சபைக்கு முன்பாக ஆற்றிய பிரசங்கம் தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில், அவர் பதிவிட்டுள்ள பௌத்த மதம் மற்றும் புத்தர் தொடர்பான விடயம் சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.