இனரீதியாக கிழக்கு ஆளுநர் மீது வீண்பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது : கருணாகரம் ஜனா
கிழக்கு மாகாணத்தின் அனைத்து உயர்மட்ட விடயங்களையும் கையாளும் அதிகாரிகளாக முஸ்லீம் அதிகாரிகள் இருக்கும் போது இனரீதியாக ஆளுநர் மீது வீண்பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
உயர் பதவிகளில் முஸ்லிம் அதிகாரிகள் இல்லை என்ற வகையில் கருத்துக்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கின்றமை தொடர்பில் இன்று (19) கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஒருதலைப் பட்சம்
மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்திலே மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழர் ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட வரலாறு இருந்திருக்கவில்லை.
தற்போது தான் செந்தில் தொண்டமான் ஆளுநராக வந்திருக்கின்றார். அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அமைச்சராக இருந்த காபீஸ் நசீர் அவருக்கெதிராக இனரீதியான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷறப் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் ஆகியோரும் இவ்வாறாகவே பேசி இருக்கின்றார்கள்.
முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திலே அதாவது அமைச்சுகளின் செயலாளர்களாக இல்லை என்பதும், ஆளுநர் ஒருதலைப் பட்சமாக சிங்களவர்களையும் தமிழர்களையும் அப்பதவிகளுக்கு நியமித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
முஸ்லீம் அதிகாரிகள்
இவர்களின் கூற்றுக்கள் யாவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இனரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாகவும் உள்ளது.
ஆளுநர் செந்தில் தொண்டமானைப் பொறுத்தமட்டில் இந்த மாகாணத்திலே மூவின மக்களுக்கும் நியாயமான ஒரு சேவையை வழங்குகின்றார். இதனைப் பொறுக்க முடியாமல் இஸ்லாமிய சகோதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.
ஏனெனில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் நிர்வாக ரீதியாக முஸ்லிம் அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கின்றது.
நடுநிலையான சேவை
குறிப்பாகச் சொல்லப்போனால் தற்போது கிழக்கு மாகாணத்திலே இடமாற்றம், நியமனம், பதவியுயர்வு, மாகாணத்தின் ஒட்டுமொத்த நிதியையும் கையாள்வது, கணக்காய்வினை மேற்கொள்வது என நிர்வாக ரீதியில் முஸ்லிம் சகோதரர்கள் அதிகாரிகளாக இருக்கும் போது அமைச்சுகளின் செயலாளர்கள் என்ற ரீதியில் மாத்திரமே முஸ்லிம் சகோதரர்கள் இல்லை.
இந்த நிலையில் இனரீதியாக இவர்கள் பேசுவதென்பது செந்தில் தொண்டமானுக்கு எதிரான ஒரு கருத்தாகவே நான் பார்க்கின்றேன்.
மூவின மக்களுடன் நடுநிலையான சேவையைச் செய்து கொண்டிருப்பவர் மீது வீண்பழி சுமத்தும் இவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |