ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் மீது வழக்கு தாக்கல்
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத 2,000 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்னாயக்க இதனை சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் 13 பேர், நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் 1,700 இற்கும் மேற்பட்டோர் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ஒரு பகுதியினரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்காத பெரும் எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளனர்.




