இளங்குமரன் எம்.பி மீதான வழக்குத்தாக்கல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஒரு வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்துகு வெளியில் பகிரங்கமாகத் தெரிவித்த சில கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும், ஜெயபாலன் கஜபாகு என்பவரும் இழைத்துள்ளனர் எனத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயத்தின் முன்னால் இந்த வழக்கு இன்று(18.11.2025) எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளிகள் இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அகதி ஒருவர்
எதிராளிகளில் ஒருவரான இளங்ககுமரன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி சாமர நாணயக்கார என்பவர் மற்றைய எதிராளியான கஜபாகுவுக்குச் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க அவகாசம் கோரியமையால், அதற்கு இடமளித்து, வழக்கு வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய சிறிலோகநாதன் என்ற அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் சார்பில் தமது கனிஷ்ட சட்டத்தரணிகளுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி, அவரைப் பிணையில் விடுவிக்க வாதாடி இருந்தார்.
பொலிஸார் கடுமையாக ஆட்சேபித்தமையால் அன்றைய தினம் பிணை வழங்கப்படவில்லை.
மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது
இரண்டு தினங்களுக்குப் பின்னர் சிறிலோகநாதன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் காணொளிப் பதிவுகளுக்குப் பேட்டியளித்த இளங்குமரன் எம்.பியும், கஜபாகு என்பவரும், தங்களுடைய அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்காக, நாடு திரும்பிய அகதியை சுமந்திரன் தனது சட்ட வாதாட்டத்தின் மூலம் விளக்கமறியலில் வைக்கச் செய்து, நீதிமன்றத்தோடு இணைந்து முறையற்ற வகையில் செயற்பட்டார் எனக் கூறியிருக்கின்றார் என்று சுமந்திரன் இப்போது தாம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மல்லாகம் நீதிமன்ற வழக்குப் பதிவுகள், காணொளிப் பதிவுகள் போன்றவற்றையும் மனுதாரர் தமது மனுவோடு இணைத்துள்ளார்.
இன்று மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிராளிகளில் ஒருவரான ஜெயபாலன் கஜபாகு என்பவருக்குச் சட்டத்தரணி முன்னிலையாகாத நிலையில் அதற்குக் கால அவகாசம் வழங்கி வழக்கை பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |