பியுமி ஹன்சமாலிக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த நீதிமன்று உத்தரவு
மாடல் அழகி பியுமி ஹன்சமாலி மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு கொழும்பு (Colombo) மேலதிக நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது, இன்று (11) வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (11) மீள அழைக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
ஆவணங்களை சரிபார்த்தல்
உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் 190ஆவது பிரிவின்படி, இருவரும் வரிச்சட்டம் தொடர்பான குற்றங்களைச் செய்திருக்கிறார்களா என்பதை விசாரிக்க உத்தரவிடுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பதற்காக இருவரது வீடுகளையும் சோதனையிட நீதிமன்ற உத்தரவு பெற்று கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் அந்த நேரத்தில் இருவரும் வீட்டில் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.