திருகோணமலை காட்டுப் பகுதியிலிருந்து சொகுசு கார் மீட்பு: தப்பிச் சென்ற கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு காரொன்றை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான துரித விசாரணைகளை மொரவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (09.08.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் சோதனை
திருகோணமலைப் பகுதியில் இருந்து சொகுசு காரொன்றில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த குறித்த சொகுசு காரை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, காரைச் செலுத்திய நபர் பொலிஸாரின் கட்டளையை மீறி காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்திச் சென்றுள்ளார்.
அத்துடன், தப்பிச் செல்லும் வழியில் வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரையும் மோதித் தள்ளியவாறு அசுர வேகத்தில் கார் சென்றுள்ளது.
விசாரணை
தொடர்ந்து அத்தாபெந்திவெவ வீதியினூடாகத் தப்பிச் சென்ற அந்த வாகனம், தம்பவெவ குறுக்கு வீதியைப் பயன்படுத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கு காரை நிறுத்திய கடத்தல்காரர்கள், அதிலிருந்த போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மொரவெவ பொலிஸார், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகவும், காயமடைந்தவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காகவும் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
