இந்தியா தடுப்பு ஊசி வழங்கியமையானது உள்நோக்கமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது!பிமல் ரத்நாயக்க
இந்தியா இலங்கைக்கு தடுப்பு ஊசி வழங்கியமையானது உள்நோக்கமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவினால் இலங்கைக்கு தடுப்பூசி வழங்கியதானது எந்தவித பிரதி உபகாரம் இல்லாமலோ அல்லது எந்தவித உள்நோக்கம் இன்றி வழங்கியிருந்தால் அதனை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் இலங்கை துறைமுகத்தைபெற்றுக்கொள்வதற்காக தான் இந்த தடுப்பூசியை வழங்கியிருந்தால் அதனை நாங்கள் சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு இருந்தால் இச்செயற்பாட்டை நாங்கள் ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்.இவ்வாறான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ள கூடாது.
இதேவேளை, இச்செயற்பாட்டிற்கு இலங்கை அரசாங்கமும் உடந்தையாக போக கூடாது.இலங்கையில் எந்த பகுதியாக இருந்தாலும் சரி குறிப்பாக அம்பாந்தோட்டையை சீனாவிற்கு வழங்கியமை, அதேபோன்று கொழும்பு துறைமுகத்தை வழங்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.