அமெரிக்க நாடாளுமன்ற கலவரக்காரர்கள் தொடர்பில் விவேக் ராமசாமி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
அமெரிக்க நாடாளுமன்ற கலவரக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தற்போது இந்த வரிசையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தீவிர தேர்தல் பிரசாரங்களில் விவேக் ராமசாமி
அதன்படி நாட்டின் பல்வேறு நகரங்களில் தீவிர தேர்தல் பிரசாரங்களில் விவேக் ராமசாமி ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் இடம்பெற்றதுடன், அதில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்லில் வெற்றி பெற்றால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
"பைடன் ஆட்சியில் அமெரிக்காவின் நீதித்துறை சுதந்திரம் இழந்து காணப்படுகிறது.பயங்கரவாதிகள் பலர் அமெரிக்காவில் சுற்றித்திரியும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்தின் ஈடுபட்டதாக கூறப்படுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான் ஜனாதிபதியாக பதவியேற்றால், நாடாளுமன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவேன்" என அவர் மேலும் கூறியுள்ளார்.