எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(18.09.2026) அடையாளம் காணப்பட்டுள்ளது.
கீரிமலை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணித்திருந்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில், கடந்த வியாழக்கிழமை சபையின் மாதாந்த கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து, கீரிமலையில் கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள், வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.
மருத்துவ கழிவுகள் அடையாளம்
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளனர்.

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல் கொடுத்து வரும் நிலையிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர் ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி. வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.