கனடாவில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்! வலுக்கும் எதிர்ப்பு
கனடாவில் அரசியல்வாதியொருவர் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ கேம்ப்ரிட்ஜ் பகுதியினை சேர்ந்த ஃபரிசா நவாப் (Farisa Navab) எனும் (20) வயதுடைய பெண் ஒருவர் அபூர்வ நோய் ஒன்றின் காரணமாக கடந்த மாதம் செப்டெம்பர் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான ராண்டி ஹிலியர் (Randy Hillier)தனது சமூக ஊடக பக்கத்தில், ஃபரிசா நவாப் உட்பட 10 பேரின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமை காரணமாக பக்க விளைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நல குறைப்பாடு காரணமாக உயிரிழந்த ஃபரிசா நவாப்வின் புகைப்படத்தை பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதியொருவர் தவறாக பயன்படுத்தியமைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும்,குறித்த பெண்ணின் புகைப்படத்தை அனுமதியின்றி தவறான நோக்கில் பயன்படுத்திய Hillier மன்னிப்புக்கோர வேண்டுமென்றும், புகைப்படம் முதலான போலித் தகவல்களை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவினை சேர்ந்த அரசியல்வாதியான ராண்டி ஹிலியர் தடுப்பூசிக்கு எதிரான கொள்கைகளையும், தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.